
திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டியைச் சேர்ந்த ராசு எப்க்யுஎல் ஆன்லைன் செயலியில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாந்தோப்பில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் ராசுவின் உடலை நத்தம்–மதுரை நெடுஞ்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, ராசு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர்கள், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இருப்பினும் போராட்டம் கைவிடப்படாததை தொடர்ந்து, போலீசார் லேசான தடியடி நடத்தி சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது, சிலர் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

