க்ரைம்
Trending

விவசாயிகள் பெயரில் வண்டல்மண் கடத்தல்

விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட குளங்களில் பதிவு எண் இல்லாத வாகனங்களை வைத்து மண் கடத்தல்

பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் நீர் பற்றாக்குறைக்கு இடையில் குளங்களில் அரசு நிர்ணயித்த அளவை மீறி வண்டல் மண் அள்ளப்படுவதாகவும் இரவு நேரங்களில் மண் திருட்டு நடைபெறுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்

பழனி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை மற்றும் குதிரையாறு அணை ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.


​வரதமாநதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சிறுநாயக்கன்குளம், இடும்பன்குளம், வையாபுரிகுளம், அய்யம்பள்ளி குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்களை சென்றடைந்து சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் வரத்தின்றி இக்குளங்கள் முற்றிலுமாக வறண்டு காணப்படுகின்றன.

விவசாய நிலங்களின்பயன்பாட்டிற்காக குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அய்யம்பள்ளி மற்றும் சிறுநாயக்கன் குளங்களில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பல ஆடி ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் குளத்தின் இயற்கை அமைப்பும் கரைகளும் பலவீனமடைந்து சேதமடைகின்றன.

இதனால் மழைக்காலத்தில் தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்த்தேக்க திறனும் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிறுநாயக்கன் குளத்தில் விவசாய தேவைக்கு மண் எடுப்பதாகக் கூறி சிலர் இரவு நேரங்களில் பதிவு எண் இல்லாத டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மண்ணைத் திருடிச் செல்கின்றனர். அதேபோல பகல் நேரங்களில் அரசு வழங்கிய ஒரே ஒரு அனுமதிச் சீட்டை (Pass) வைத்துக்கொண்டு பலமுறை மண்ணை அள்ளிச் செல்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


​ஆழமாக தோண்டப்படுவதால் குளத்தின் கீழ் அடுக்கில் உள்ள தரிசு மண் வெளியே வந்து மண்வளமும் சுற்றுச்சூழல் சமநிலையும் முற்றிலுமாக அழியும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே தண்ணீர் இன்றி விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற தொடர் அத்துமீறல்களால் குளங்கள் தங்களின் இயல்புத் தன்மையை இழந்து வருகின்றன.

எனவே கனிம வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த அளவிற்கு மேல் ஆழமாகத் தோண்டுபவர்கள் மீதும் போலி பாஸ் மூலம் இரவு நேரத்தில் மண் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button