

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலமான சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளிமலை ஆண்டவர் கோவில்.
இக்கோவிலானது சிறுமலை அகஸ்தியர்புரம் சமதளப்பகுதியில் இருந்து சுமார் 850 அடி உயரத்திற்கும் மேல் உள்ள குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சிவ பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வந்து செல்லும் முக்கியமான புனிததலமாக இருந்து வருகிறது . பௌர்ணமி, சிவராத்திரி உட்பட சிவனுக்கு உகந்த வழிபாட்டு தினங்களில் பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி வழிபடும் முக்கிய புனிததலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த கோவிட்-19 காலத்திற்குப் பின்னர் பக்தர்களின் வருகை சாதாரண நாட்களில் குறைந்துள்ளது. இதனை பயன்படுத்தி இளம் ஜோடிகள் அதிக அளவில் வந்து கோவிலை சுற்றியுள்ள சமதளப் பகுதிகளில் சிவ பக்தர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளிமலை ஆண்டவர் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி ஆகும். இருந்த போதிலும் வனத்துறையினர் இந்தப் பகுதியில் எந்தவித கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் தான் இதுபோன்ற அருவருக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்று சிவ பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே வெள்ளிமலை ஆண்டவர் கோவில் பகுதிகளை முறையாக கண்காணித்து இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து சிவ பக்தர்கள் முழு மன நிறைவோடு வெள்ளிமலை ஆண்டவரை வழிபட்டுச் செல்ல உதவிடுமாறு சிவ பக்தர்களும் உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகின்றது
