
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தார். இந்நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் த.வெ.க சார்பில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார். தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சத்தியபாமா வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, சத்தியபாமா வேட்புமனுத்தாக்கல் செய்ய பேரணியாக வந்தபோது ஏராளமானோர் திரண்டதால், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் முன்னிலையில், பிற கட்சிகளைச் சேர்ந்த சிலர் த.வெ.க-வில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதை விரும்பாமல் அக்கட்சியிலிருந்து வெளியேறி சத்தியபாமா த.வெ.க-வில் இணைந்ததாகக் கூறினார். மேலும், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.


