
சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் மூலம் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவோ அல்லது வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று மதுபானம் விற்பனை செய்யவோ அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கக் கூடாது என்ற திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று மட்டுமே மதுபானங்களை வாங்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் கட்டணமுறையின் நோக்கம், பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகவும், பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது . மேலும், பல ஆண்டுகளாக புகாருக்குள்ளாகி வரும் எம்.ஆர்.பி.க்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் முறையை முழுமையாகத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். புதிய நடைமுறையின்படி, வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் டாஸ்மாக் கடைக்குச் சென்று அங்குள்ள மதுபானங்களைத் தேர்வு செய்து, கடையில் வழங்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி எம்.ஆர்.பி. தொகையை மட்டும் டிஜிட்டல் முறையில் செலுத்தி, மதுபானங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில், கைபேசி அல்லது டிஜிட்டல் கட்டண வசதி இல்லாதவர்கள் வழக்கம்போல் பணம் செலுத்தியே மதுபானங்களை வாங்கலாம் என்றும் அமைச்சர் விளக்கினார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு முதற்கட்டமாக 25 சதவீத சம்பள உயர்வு மற்றும் ESI மருத்துவ வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுபான விலை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். மதுபானத்தை விற்று அதன் மூலம் வருவாயை பெருக்க வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார். இதில் நடைபெற்ற ஊழல்களை கண்டறிந்து அதை சரி செய்வதே எங்கள் நோக்கம் என்றும், ஊழல்களை குறைத்தாலே போதும் வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறியுள்ளார்.
