
வடமதுரை – காணப்பாடி ரோட்டில் மழைநீருடன் அடித்து வரப்பட்ட மணல் சாலையை முழுவதும் மூடியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இந்த சாலையில் பள்ளிகள், வங்கிகள், போலீஸ் ஸ்டேஷன்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதால், தினமும் அதிகளவில் வாகனப் போக்குவரத்து உள்ளது.
இதனால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், ஆக்கிரமிப்புகளும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதையடுத்து, மழைக்காலங்களில் சாலையின் இருபுறமும் உள்ள வடிகால்களில் நீர் செல்லாமல், சாலையிலேயே பாய்ந்து செல்கிறது. இதனால் நீருடன் அடித்து வரப்படும் மணல் ஐயப்பா நகர் ரோடு பிரிவு அருகே குவிந்து, சாலையை ஆபத்தான நிலையில் மாற்றியுள்ளது.
இதனால் சாலையில் குவிந்துள்ள மணலை உடனடியாக அகற்றி, வடிகால் வசதியை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


