
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டின் அருகே உரிய அனுமதியுடன் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்தார்.
அப்போது, விநாயகர் சிலைக்கு 100 ரூபாய் நோட்டுகளால் தயாரிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பண மாலையை அணிவித்தார். இந்நிலையில், இரவு வரை சிலை அருகே இருந்த விக்னேஷ்வரன், பின்னர் வீட்டுக்குச் சென்றார்.
மறுநாள் அதிகாலை சிலையைப் பார்த்தபோது, அணிவிக்கப்பட்டிருந்த பண மாலை காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து விக்னேஷ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், தண்டையார்பேட்டை நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்த ரூபன், பட்டேல் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 மற்றும் 17 வயதுடைய 4 சிறார்களும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
