
சென்னை திருவொற்றியூரில் , 2007ஆம் ஆண்டு யாதவர் சங்கத் தலைவர் பாண்டியமணி என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, அவருக்கு எதிராக 2010ஆம் ஆண்டு பொன்னேரி நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
இதையடுத்து, அப்துல்லாவை தேடும் பணியில் தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், 2007ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் போலீசாரிடம் இருந்தது.
அந்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்பதை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் உருவாக்கினர். இந்தப் புகைப்படங்களை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
அந்த சமூக வலைதளத் தகவல்களின் அடிப்படையில் அவர் சூளைமேடு பகுதியில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அப்துல்லா அடிக்கடி தனது வசிப்பிடத்தை மாற்றி வந்ததும், திருமணம் செய்து கொண்டு திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்ததும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஷேக் அப்துல்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
