செய்திகள்

அஞ்சல் சேமிப்பு கணக்குகள் அதிகரிப்பு

செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தலைமை அஞ்சலகம், 42 துணை அஞ்சலகங்கள் மற்றும் 198 கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், முதியோர் சேமிப்பு திட்டம், பொன் மகன் வைப்பு நிதி திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு, தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களில், திட்டத்திற்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் கணக்கு தொடங்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் 54,467 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன. 2025-26ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 69,765 ஆக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டை விட 15,298 கணக்குகள் அதிகம்.

மேலும், 2026-27ஆம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 27,657 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து செங்கல்பட்டு கோட்ட கண்காணிப்பாளர் வினோத்குமார் கூறுகையில், அனைத்து வகையான அஞ்சல் சேமிப்பு திட்டங்களிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். அஞ்சல் ஊழியர்களின் ஒத்துழைப்பால் காப்பீட்டு கணக்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் மாதம் ரூ.799 பிரீமியம் செலுத்தி வந்த நிலையில் உயிரிழந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு அஞ்சல் துறை சார்பில் ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய சேமிப்பு மற்றும் காப்பீட்டு கணக்குகளை தொடங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அஞ்சல் துறையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button