தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திருவள்ளுவர் நகர் மற்றும் திருவுடையான் சாலை 1-ஆம் தெருவில் உள்ள பொதுமக்கள் தங்களது பட்டாவை இணையத்தளத்தில் பதிவேற்ற கோரி கோட்டாட்சியர் அனிதா விடம் மனு அளித்தனர்.
இந்த 2தெருக்களிலும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டாவும், பின்னர் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் புதிய பட்டாவும் வழங்கப்பட்டன.
இருப்பினும், நகர நிலவரித் திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த 300 பேரின் பட்டா விபரங்களும் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுள்ளன. இதனால் தங்களது இடங்கள் இன்னும் அரசு வரைபடத்தில் புறம்போக்கு நிலமாகவே நீடிப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவு செய்ய முடியாமலும், அரசின் சலுகைகளைப் பெற முடியாமலும் அவதிப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விடுபட்ட தங்களது பட்டாக்களை உடனடியாகக் கணினியில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் திரளாகச் சென்று கோட்டாட்சியர் அனிதாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
