தென்காசி மாவட்டம், பாம்புகோவில்சந்தை இரயில் நிலையத்தில் ‘கொல்லம் எக்ஸ்பிரஸ்’ ரயில் இன்று முதல் நின்று செல்லும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து, அங்கு ரயில் நின்று சென்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, பாம்புகோவில்சந்தை நிறுத்தத்தில் நின்று செல்லவில்லை. இதனால், புளியங்குடி, சுரண்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் இந்த ரயிலை அங்கு நிறுத்தக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இந்த நிறுத்தத்தில் ரயில் நின்று செல்ல ரயில்வே துறை உத்தரவிட்டது.
இதன்படி, இன்று பாம்புகோவில்சந்தை வந்தடைந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, திமுக எம்பி ராணி ஸ்ரீகுமார் மற்றும் பாஜக நிர்வாகி ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் வந்தே மாதரம், பாரத்மாதா கி ஜெ எனவும், திமுக தொண்டர்கள் M.K. ஸ்டாலின் என போட்டிப் போட்டுக் கொண்டு கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புளியங்குடி டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையிலான போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கையால் பதற்றம் தணிந்தது. கடந்த 7 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதால், பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


