க்ரைம்

“மடியில் கனமில்லை” : எ. வ. வேலு பரபரப்பு பேட்டி…

எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை நான் எந்தவித குற்றமும் செய்யாதவன் அரசாங்கம் என்னை திட்டமிட்டு இதில் இணைத்துள்ளார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எவ வேலு பேட்டி

அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூபாய் 3.23 கோடி முறைகள் நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் ஒன்பது பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத 40 லட்ச ரூபாய் பணம் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 3ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது.ஆனால் இதய சிகிச்சை தொடர்பாக தான் சிங்கப்பூரில் ஒரு மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளதாகவும் தற்போது என்னால் ஆஜராக முடியாது சிகிச்சை முடிந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என அவர் வழக்கறிஞர் மூலம் கடிதம் ஒன்று வழங்கி கால அவகாசம் கோரப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் இருந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார் அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று தெரிவித்தார் அதன் அடிப்படையில் இன்று ஆஜராக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டிருந்தது,

அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணி அளவில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெண்டர் ஒதுக்கியது தொடர்பாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் சுமார் 5 மணி நேரமாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருவதாகவும் அதை எழுத்துப்பூர்வமாக பெற்றும் அவரது வாக்குமூலங்களை வீடியோ ஆதாரங்களாக பதிவு செய்தும் விசாரணை நடத்தினர்.

மேலும் நெடுஞ்சாலைத் துறையில் விடப்பட்ட ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசு விதிமுறைகள் பின்பற்றி கொடுக்கப்பட்டதா, ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் சாலை போடாமலே அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாடி இருந்தநிலையில் இந்த விடப்பட்ட டென்டர்களை நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட்டதா என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் துருவி துருவி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் விசாரணை நடத்தினர்.

மேலும் 3.23 கோடி ரூபாய் பணம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அது எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்ற பல்வேறு கோணங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியதாகவும்,மேலும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் போலி ஆவணங்கள் கொடுக்கப்பட்ட போது அதனை ஏன் முறையாக ஆய்வு செய்யவில்லை எனவும், மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலை பணிக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் ஏதாவது முறைகேடுகள் நடத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுனர்.

இதையடுத்து சுமார் ஐந்து மணி நேரம் விசாரணைக்கு பிறகு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என அனைவருக்கும் தெரியும் நான் சிங்கப்பூரில் சிகிச்சை முடித்து சென்னை வந்த போது தெரிவித்தேன் அழைத்தால் தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் ஆஜராகுவேன் என்று, சென்னை உயர்நீதிமன்றமும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் எனக்கு சம்மன் வழங்கப்பட்டது. காலை 11:00 மணி முதல் மாலை 4 மணி வரை என்னிடம் விசாரணை அதிகாரி விசாரணையை மேற்கொண்டார். அப்போது பல்வேறு கேள்வி கனைகளால் எனக்கு தொடுத்தார்கள், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எனக்கும் என் மனதிற்குப்பட்ட அனைத்து உண்மைகளையும் பதில் அளித்துள்ளேன்.

எனது பதில்கள் அனைத்தும் 100 சதவீதம் உண்மை கலந்தது அதில் எந்தவிதமான கலப்படமும் இல்லை, இன்றைய விசாரணையை நான் நிறைவு செய்து விட்டு வந்துள்ளேன் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளேன். மேலும் மீண்டும் என்னை எப்போது அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என அதிகாரிகளும் கூறிவிட்டு வந்துள்ளேன்.

எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, நான் எந்தவித குற்றமும் செய்யாதவன். அரசாங்கம் என்னை திட்டமிட்டு இதில் இணைத்துள்ளார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இது குறித்து விரிவாக என்னால் சொல்ல முடியாது. வரும் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வரவிருக்கிறது அப்போது நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து இருக்கிறேன்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நடத்திய விசாரணை குறித்து நான் வெளியில் சொல்ல முடியாது.

அம்பு ஏய்தியவன் எங்கேயோ இருக்கிறார்கள் காவல்துறையினர் வெறும் அம்பு தான் அவர்கள் மீது கோபித்துக் கொள்ள முடியாது. இதே காவல்துறை தான் இரண்டு மாதத்திற்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியில் பணி செய்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் காவல்துறையில் இருப்பவர்கள் எப்போதும் நிரந்தரம் தான்.

முறைப்படி என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது முறைப்படி நான் அனைத்திற்கும் பதில் அளித்துள்ளேன், நான் அளித்த அனைத்து வாக்குமூலங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டனர். அனைவருக்கும் வழக்கமாக நடத்தப்படும் விசாரணை முறைதான் எனக்கு மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் மற்றவர்களுக்கு சம்மன் கொடுத்துள்ளார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது என்னை அழைத்தார்கள் விசாரணைக்கு வந்தேன் முடித்துவிட்டு செல்கிறேன் இவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button