க்ரைம்
Trending

பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் சாகசம் செய்த வாலிபரை பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டி பேருந்து நிறுத்தத்தில், அரிவாளுடன் சாலையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

கோபால்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கையில் அரிவாளுடன் பனியன் மற்றும் டவுசர் அணிந்தபடி சாலையில் அங்கும் இங்கும் நடந்து, பொதுமக்களை மிரட்டியும், கூச்சலிட்டும், அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்தும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கோபால்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்த நோயல் ஜான் (30) என்பதும், திண்டுக்கல்லில் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரித்தபோது, குடும்பத்தினர் தனக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பதாகவும், தனது சேவல் இரண்டு நாட்களாக காணாமல் போனதால் ஆத்திரத்தில் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியுள்ளார்.

இதையடுத்து, அவரது கையில் இருந்த அரிவாளை போலீசார் பறிமுதல் செய்து, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

பகல் நேரத்தில் பேருந்து நிறுத்தம் அருகே அரிவாளுடன் வாகனங்களை மறித்து வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button