போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் அமல்ராஜ், போதை பொருள் பாதிப்பு குறித்தும், ஆன்லைன் மோசடி குறித்தும், மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப்பொருளுக்கு எதிராக போலீசாரின் அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளின் நெட்வொர்க்கை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

