
புதுக்கோட்டை: கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் ரெங்கம்மாள் சத்திரம் அருகே மாணவிகள் ஏறியுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறி அவர்களை கீழே இறங்குமாறு நடத்துநரும், சில பயணிகளும் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து, நடத்துநர் பேருந்தின் கதவைத் திறந்து மாணவிகளை வலுக்கட்டாயமாக கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் 8 மாணவிகள் காயமடைந்தனர். ஒரு மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டித்து பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து, பேருந்தின் நடத்துநர் மணிகண்டன் மற்றும் ஓட்டுநர் அர்ஜுனன் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

