
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில், நாகை மாவட்ட வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனையை மீண்டும் நாகையிலேயே அமைக்க வலியுறுத்தி இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.G.K. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். நாகையில் கடந்த 110 ஆண்டுகளாக இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பின்னர் நாகை நகர எல்லையைத் தாண்டி சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தூருக்கு மாற்றப்பட்டதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். பின்னர் விதிமுறைகளை காரணம் காட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை வேதாரண்யத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் நாகை நகரில் பிரசவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை போன்ற முக்கிய மருத்துவ சேவைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். நாகை, நாகூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்கள் அவசர சிகிச்சைக்காக சுமார் 10 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக இரவு நேரங்களில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக தொலைதூரம் செல்ல வேண்டியிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். எனவே, வேதாரண்யத்திற்கு மாற்றப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் நாகை நகரிலேயே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள், பேருந்து நிலைய வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

