
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10வது நாளாக தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. திரிசூலி நீர்மின் திட்டத்திற்கான சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான ஊழியர்களின் நிலை குறித்தும் தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுரங்கத்திற்குள் சுமார் 225 மீட்டர் தொலைவில் சிக்கியிருந்த சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஒருவர் 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாள ராணுவம் மற்றும் தென்கொரிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அவர் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கு முன்னதாக நேற்று சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் மீட்கப்பட்டிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, நுவாகோட் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து சந்திகா ஸ்ரேஷ்தா என்ற 64 வயது மூதாட்டியை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். போர்வையில் சுற்றியபடி மீட்கப்பட்ட அந்த மூதாட்டி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


