தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கையும் களவுமாக கைது!
தென்காசி அருகே பிரானூர் பகுதியில் தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கிய செங்கோட்டை பகுதி சர்வேயரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: செங்கோட்டை பிரானூர் பகுதியைச் சேர்ந்தவர் பால் தேவர் மகன் மாடசாமி (வயது 52). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் பிரானூர் கிராம நத்தத்தில் உள்ள 2.26 செண்ட் இடத்தையும், அதில் உள்ள வீட்டையும் கிரைய ஆவணப்படி வாங்கியுள்ளார். இந்த இடத்திற்குத் தனிப்பட்டா கோரி கடந்த 06.07.2026 அன்று ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.
மனுவை பரிசீலித்த செங்கோட்டை சர்வேயர் ராமர்செல்வம் (37), நிலத்தை அளப்பதற்காக மாடசாமியைத் தொடர்பு கொண்டுள்ளார். கடந்த 07.08.2026 அன்று மதியம் சம்பவ இடத்திற்குச் சென்று நிலத்தை அளந்த சர்வேயர் ராமர்செல்வம், தனிப்பட்டா வழங்க பரிந்துரை செய்ய வேண்டுமானால் ரூ.10,000 லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
ஏழை கொத்தனாரான மாடசாமி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறி, தொகையைக் குறைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் சர்வேயர் பணத்தை தயார் செய்துவிட்டு தகவல் தெரிவிக்குமாறு கறாராகக் கூறிச் சென்றுள்ளார்.
அன்று மாலையே மாடசாமியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற சர்வேயர் ராமர்செல்வம், கேட்ட பணம் தயாராகிவிட்டதா எனக் கேட்டுள்ளார். அதற்கு மாடசாமி, வெள்ளிக்கிழமை பணம் கைக்கு வந்தவுடன் தருவதாகக் கூறியுள்ளார். அதற்கு சர்வேயர், “வெள்ளிக்கிழமை கண்டிப்பாக ரூ.10,000 தந்துவிட வேண்டும், இல்லையெனில் உனது மனுவை தள்ளுபடி செய்துவிடுவேன்” என மிரட்டும் தொனியில் கூறிச் சென்றுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மாடசாமி, இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரசாயனம் தடவப்பட்ட ரூ.10,000 பணத்தை மாடசாமியிடம் கொடுத்து அனுப்பினர். திட்டமிட்டபடி, பிரானூர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து சர்வேயர் ராமர்செல்வம் அந்தப் பணத்தை வாங்கியுள்ளார்.
அப்போது அங்கு இரகசியமாக மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) திரு.ம.பால்சுதர் தலைமையிலான காவலர்கள், சர்வேயர் ராமர் செல்வத்தை அதிரடியாகச் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். கைதான சர்வேயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
