
ஜவ்வாது மலை மின் திட்டத்தை கைவிட வேண்டும்; முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் – தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மாசிலாமணி வலியுறுத்தல்
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
-தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மாசிலாமணி
இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி, செய்தியாளர்களை சந்தித்தபோது ஜவ்வாது மலை மின் திட்டம், வேளாண் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், ஜவ்வாது மலையில் சுமார் ₹15,400 கோடி மதிப்பில் புதிய மின் உற்பத்தித் திட்டத்தை கௌதம் அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறி, இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றார். மேலும், ஜவ்வாது மலைப் பகுதியில் அரிய வனவிலங்குகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருவதால், அப்பகுதியில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்துவது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த மின் திட்டத்திற்குத் தேவையான தண்ணீரை பாலாற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் பாலாற்றை நம்பி வாழும் மக்களின் குடிநீர் தேவையும், விவசாயத்திற்கான பாசன நீரும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறினார். பாலாற்றில் இருந்து அதிகளவில் தண்ணீர் எடுக்கப்பட்டால் விவசாய நிலங்கள் வறட்சியை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
மேலும், இந்த மின் திட்டத்திற்கு முந்தைய ஆட்சிக் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.9 என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் நலன், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.
வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக கருத்து தெரிவித்த மாசிலாமணி, தேர்தலின்போது அனைத்து நிலுவை வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு ஆண்டுக்கான பயிர்க் கடன்களுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், 2026 ஜூன் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன்களை முதலில் விவசாயிகள் வங்கியில் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுவதாகக் கூறினார். ஒருபுறம் அரசு கடன் தள்ளுபடி அறிவித்தாலும், மறுபுறம் வங்கிகள் விவசாயிகளிடம் கடனை வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து நிலுவை வேளாண் கடன்களுக்கும் முழுமையான தள்ளுபடி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேகதாது அணை திட்டம் குறித்தும் பேசிய மாசிலாமணி, கர்நாடக அரசு அந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் நீர்வள உரிமையை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் தடுக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக, தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி எச்சரிக்கை விடுத்தார்.

