தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்பு மற்றும் தனித்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் மகிழ் முற்றம் அமைப்பின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, தலைமை ஆசிரியர் பொன்இருளாண்டி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களிடையே ஜனநாயகக் கடமையையும், பொறுப்புணர்வையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் இத்தகைய மாணவர் அமைச்சரவை தேர்வு செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான அமைச்சரவையில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், தகவல் மற்றும் விளம்பரம் அமைச்சர், மாணவர் நலன் அமைச்சர உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் முறைப்படி நியமிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
“தலைமைப் பண்பு என்பது மற்றவர்களை வழிநடத்துவது மட்டுமல்ல, அவர்களுடன் இணைந்து பயணிப்பது. இந்த மகிழ் முற்றம் அமைச்சரவை, மாணவர்களின் திட்டமிடுதல் மற்றும் குழுவாகச் செயல்படும் திறனை வளர்க்கும் சிறந்த தளம்” என்று வாழ்த்திப் பேசினர்.
பதவியேற்றுக்கொண்ட மாணவத் தலைவர்கள், பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், சக மாணவர்களின் நலனுக்காகவும் உண்மையோடும், மகிழ்வோடும் உழைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய அமைச்சரவைக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.