தென்காசியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மேட்டுத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் புதிதாக கட்டிய தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி கடந்த மே 22-ம் தேதி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மின் இணைப்பிற்காக மின் கம்பம் நடுவதற்கும், மின் இணைப்பு கட்டணத்திற்காகவும் பணம் செலுத்தப்பட்ட நிலையில், கம்பம் நடும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், தென்காசி மின்வாரிய அலுவலக வயர்மேனாக வேலை செய்யும் ஆறுமுகச்சாமி என்பவர் மின் மீட்டர் பொருத்துவதற்கு ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். நாகராஜன் வீட்டிற்கு வயரிங் ஒப்பந்ததாரராக வேலை செய்த சண்முகசுந்தரம் லஞ்சம் தர மனமில்லமால், இது குறித்து தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், லஞ்சமாக கொடுக்க ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற ஆறுமுகச்சாமியை கையும் களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
