
தமிழகம் முழுவதும் அரசு செவிலியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து, கருப்பு பேட்ஜ் அணிந்து மூன்று நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் தலைமையில், ஆட்குறைப்பு அரசாணை 204ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும், ‘செவிலியர் அலுவலர்’ என்ற பெயர் மாற்றம் வேண்டும் என்றும் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டங்களை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.