
குற்றாலம் சீசன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில், தனியார் நீர்வீழ்ச்சிகள் என்ற பெயரில் நடைபெற்று வரும் சட்டவிரோத வசூல் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றாலம் பிரதான அருவிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பலர் குண்டாறு, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளை நோக்கி செல்கின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, சிலர் சுற்றுலாப் பயணிகளிடம் ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலித்து, தனியார் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குண்டாறு மற்றும் மேக்கரை பகுதிகளில் செயல்பட்டு வந்த பல சட்டவிரோத நீர்வீழ்ச்சிகள் அகற்றப்பட்டன. மேலும் குண்டாறு பகுதியில் சில நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதைகளும் அதிகாரிகளால் மூடப்பட்டன. ஆனால், மேக்கரை பகுதியில் தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்பைவிட தற்போது பத்துக்கும் மேற்பட்ட புதிய தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மேக்கரை எருமைசாடி பகுதியில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அப்போதைய கோட்டாட்சியர் முள்வேலி அமைத்து, அந்த பகுதியை சீல் வைத்து எச்சரிக்கை பலகையும் நிறுவியிருந்தார். ஆனால் தற்போது, அந்த முள்வேலி அகற்றப்பட்டு, அருகில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் எனக் கூறப்படுபவர்கள், ஒருவருக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலித்து சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இயற்கையாக ஓடும் நீரின் பாதையை மாற்றி, தனியாக கால்வாய் வெட்டி புதிய அருவி உருவாக்கப்பட்டு, அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதி மீண்டும் எப்படி திறக்கப்பட்டது? புதிய தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக யார் அனுமதி அளித்தனர்? இந்த சட்டவிரோத வசூலுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்ற கேள்விகள் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
