விளையாட்டு

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் !!

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் காமன் வெல்த் பேட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் !!

ஹாக்கி விளையாட்டுக்கு பெயர் போன தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள சங்கரலிங்கபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜா முத்துப்பாண்டி.27 வயதான ராஜா முத்துப்பாண்டி பல்வேறு தடைகளையும், சோகங்களையும் தாண்டி இந்த சாதனைகளை செய்திருக்கிறார்.

முத்துப்பாண்டி -பேச்சியம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்த ராஜா சிறுவயதிலேயே கபடி விளையாட்டில் தான் மிகுந்த ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். முத்துப்பாண்டி சுமைதூக்கும் தொழிலாளியாகவும், பேச்சியம்மாள் அருகே உள்ள தீப்பெட்டி ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். தங்களுக்கு கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தில் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்து வந்திருக்கின்றனர்.

இந்தநிலையில் ராஜா அவருடைய அண்ணன் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக

அருகே உள்ள ஜிம்மிற்கு சென்று வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஜிம்மில் உள்ள பயிற்சியாளர்கள் ராஜாவின் பளு தூக்கும் திறனை கண்டுவியந்து இருக்கிறார்கள்.

லாவகமாகவும் அதே நேரத்தில் வலிமையுடனும் எடைகளை கையாளும் அவரது திறனை பார்த்த பயிற்சியாளர்கள். அவரை இதே பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர்.பள்ளியில் படிக்கும் போதே மாவட்ட அளவிலான போட்டிகளில் இவரது திறமைகளையும்,வெற்றிகளையும் பார்த்த மயிலாடுதுறையில் உள்ள சாய் விளையாட்டு நிறுவனம் அவருக்கு விடுதியில் இடம் அளித்து பயிற்சியும் கொடுத்து வந்தனர்.

தொடர்ந்து ராஜா மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற அவருக்கு பெரம்பூர் ரயில்வே துறையில் விளையாட்டுப் பிரிவில் கீழ் வேலை கிடைத்தது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆறாவது இடம் பிடித்து அனைவரையும் கவனத்தைப் பெற்றார் .அதன் பின்பாக 2022ல் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் பங்கேற்றபோது கையில் கடுமையான காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது. காயத்தால் தனது எதிகாலமே இருண்டுபோகுமோ என்ற அளவிற்கு பயந்து இருக்கிறார் ராஜா. மனம் தளராத ராஜ மீண்டும் பயிற்சி மேற்கொண்டு அடுத்து வந்த போட்டியில் 296 கிலோ எடையை தூக்கி மீண்டும் சாம்பியனாக காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 62 கிலோ எடைதூக்கும் பிரிவில் மொத்தமாக இரண்டு சுற்றில் 286 கிலோ எடையை தூக்கி இந்தியாவிற்கு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்திருக்கிறார் ராஜா முத்துப்பாண்டி.

எழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து சிகரம் தொட்ட ராஜா முத்துப்பாண்டிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்

தமிழக முதலமைச்சர் விஜய், ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு சுமார் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்

“நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது என ராஜாவின் தாயார் பேச்சியம்மாள் விசில் செய்தியாளாரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் நாங்கள் கூலி வேலை செய்து அதில் வரும் பணத்தை வைத்து முடிந்த அளவுக்கு மகனுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உதவிகளை செய்து வந்ததாக” கண்ணீர் மல்க அவர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜா முத்துப்பாண்டியின் பயிற்சியாளரான சொர்ணமுத்து, கடந்த1999 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், கோவில்பட்டியை சுற்றி உள்ள பல பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பளுதூக்கும் பயிற்சி மையம் ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசுக்கு வைத்திருக்கிறார் சொர்ணமுத்து.

சாதனைகளுக்கு ஏழ்மை நிலை ஒரு தடையில்லை என்பதை மாணிக்கம் போல மிளிரச் செய்திருக்கிறார் ராஜா முத்துப்பாண்டி.

வாழ்த்துக்கள் ராஜா முத்துப்பாண்டி!

Show More

Sathish

OUTPUT EDITOR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button