
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், கடந்த ஏழு ஆண்டுகளில் இங்குள்ள 206 ஏக்கரில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றும் அதேபோன்று மாநகராட்சி உள்ள நான்கு மண்டலங்களிலும் இதுவரை 32,373 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மேலும், இது போன்ற மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என கூறிய அவர், ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

