
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்சேவல் கிராமத்தில், மாவீரன் பூலித்தேவரின் 311-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நெற்கட்டும்சேவல் பகுதியில் அமைந்துள்ள பூலித்தேவர் நினைவிடத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டுள்ளனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, பூலித்தேவரின் வம்சாவளியைச் சேர்ந்த கோமதிமுத்து துரைச்சி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து பால்குடம் எடுத்தனர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று, பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, பூலித்தேவரின் வீர வரலாறு மற்றும் தியாகங்களை நினைவுகூர்ந்து பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். பூலித்தேவர் பிறந்தநாள் விழாவையொட்டி நெற்கட்டும்சேவல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கூடுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


