
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம்,புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். உணவுக்கான உப்பு உற்பத்தியை செய்து வரும் இந்த தொழிலில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் உள்ளனர் . மேலும், அந்த கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்க அறிவிப்பை தெரிவித்தனர். இதனை உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உப்பளங்களில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இதனால் உப்பு உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் உப்பு உற்பத்தியை நம்பி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாகவும், கப்பல் கட்டும் தளத் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள்,மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை கைவிடாவிட்டால் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.