
வியாசர்பாடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் கழுத்தில் அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி பகுதியில் வசித்து வருபவர் சிவா. அவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் காசிமேடு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். சிவாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெண்ணிலா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், மதியம் சுமார் 2 மணியளவில் வெண்ணிலா, மூன்றாவது மாடியில் தனது அக்கா மோகனாவின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிவா, தனது மனைவி வெண்ணிலாவை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், வாக்குவாதம் முற்றிய நிலையில், சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே இருந்த அவரது அக்கா மற்றும் தாய் ஆகியோர் உடனடியாக உள்ளே ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது வெண்ணிலா படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
