
தண்டையார்பேட்டையில் 62 வயது மூதாட்டிக்கு பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டிய திமுக நிர்வாகி மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் திமுக நிர்வாகி டி. மதன்ராஜ், தன்னை தொடர்ந்து அவதூறான வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தி வருவதாக மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதன்ராஜ் தன்னை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியதாக மூதாட்டி புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் மதன்ராஜ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்ததாகவும், தினந்தோறும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு, மதன்ராஜ் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாக மூதாட்டி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மதன்ராஜ் மீது மீண்டும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில், தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படும் மதன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என மூதாட்டி போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

