
திண்டுக்கல் பேருந்து நிலையத்தை சுற்றி சுமார் 6 ஆட்டோ நிலையங்கள் உள்ளன . இதில் பெரும்பாலான ஆட்டோ நிலையங்களுக்கு முறையான அனுமதி இல்லாத போதும் சம்மந்தப்பட்ட மாநகராட்சி , காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை என யாருமே கண்டுகொள்வதில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கிடையே பயணிகளை ஏற்றி இறக்குவதில் சண்டைகள் தினந்தோறும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுவருகின்றது.
இன்று பகல் 12 மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கு அருகே பயணிகளை ஏற்றி இறக்குவதில் வாய் தகராறு மோதலாக மாறியது. இதில் பேருந்து நிலைய இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தின் அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வெளியில் இருந்து பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு மோதலாக மாறி வெளியில் இருந்து வந்த ஆட்டோ ஓட்டுனரை பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது
உரிய அனுமதி இல்லாமலும் , சட்டவிதிகளை மீறிய ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோ நிலையங்கள் மீதும் சம்மந்தப்பட்ட துறைகள் யாருமே கண்டுகொள்ளாததினால் தான் இதுபோன்ற பிரச்சனைகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது என்றும் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்திட வேண்டும் என்றும் அனைத்து ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களையும் முழு தணிக்கைக்கு உட்படுத்தி பயணிகளின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது