தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்பட்டு வந்த 18 சாயப்பட்டறை ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்தனர். அமைச்சரின் ஆய்வைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சாயப்பட்டறை ஆலைகளில் மாநில அமைச்சர் ராஜீவ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சில ஆலைகள் உரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறி செயல்படும் சாயப்பட்டறை ஆலைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, விதிகளை மீறிய 18 சாயப்பட்டறை ஆலைகளுக்கான மின் இணைப்பு அதிரடியாக துண்டிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய 4 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன. இந்த அதிகாரிகள் குழுவினர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட 18 சாயப்பட்டறைகளுக்கும் நேரில் சென்று, அவற்றைப் பூட்டி சீல் வைத்தனர்.
இந்த திடீர் சீல் வைப்பு நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சாயப்பட்டறை உரிமையாளர்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கால அவகாசமின்றி சீல் வைக்கப்படும் சாயப்பட்டறைகள்: சங்கரன்கோவிலில் 15,000 நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10,000 முதல் 15,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
நெசவுத் தொழிலின் முக்கிய அங்கமாக விளங்கும் சாயப்பட்டறைகள் தற்போது கடுமையான அரசு நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதால், இத்தொழில் முற்றிலுமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாடர்ன் டெக்ஸ்டைல்ஸ் அசோசியேஷன் பிரதிநிதி வெங்கடேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளுக்கு நாங்கள் எதிரி அல்ல. நாங்களும் விதிகளுக்குக் கட்டுப்பட்டு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தயாராகவே இருக்கிறோம்.
ஆனால், எவ்வித கால அவகாசமும் வழங்காமல், கடந்த 15 முதல் 20 நாட்களுக்குள் சாயப்பட்டறைகளுக்குச் சீல் வைப்பது மற்றும் மின் இணைப்பைத் துண்டிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது எங்களை நிலைகுலையச் செய்துள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
”ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தங்களை விமர்சிப்பதற்கு முன்பாக தங்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டு காலம் அவகாசம் தேவை எனத் தமிழக முதலமைச்சரே கோரியிருந்தார். அரசுக்கே கால அவகாசம் தேவைப்படும் போது, அன்றாடக் கூலி வேலை செய்யும் எளிய நெசவாளர்களுக்கு எவ்வித அவகாசமும் தராமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மின் இணைப்பைத் துண்டிப்பது எந்த வகையில் நியாயம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒரு தனிநபருக்குச் சுமார் 30 முதல் 40 லட்ச ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்படும் நிலையில், 15 முதல் 20 லட்ச ரூபாய் முதலீடே செய்ய முடியாத எளிய நெசவாளர்களால் இந்தத் தொகையைத் திரட்ட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் வரை தொழிலைத் தொடர 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

