தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மொபைல் செயலி மூலம் பழகிய நண்பரையே தாக்கி, ஓரினச்சேர்க்கை வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி நகை மற்றும் செல்போன் பறித்த சம்பவத்தில் 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரம்மமீன குமார் என்ற இளைஞருக்கும் ரமேஷ், சக்திவேல், பிரபஞ்சன், அருண் பிரதீப் ஆகியோருக்கும் இடையே மொபைல் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சக நண்பர்கள் பிரம்மமீன குமாரை மொபைல் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, சீவலராயனேந்தல் கண்மாய் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அங்கு வந்த பிரம்மமீன குமாருடன் அந்த கும்பல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், அதனைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். மிரட்டி, அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பிரம்மமீன குமார், சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் தொடர்புடைய ரமேஷ், சக்திவேல், பிரபஞ்சன், அருண் பிரதீப் ஆகிய 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மொபைல் செயலி மூலம் திட்டமிட்டு பிரம்மமீன குமாரை வரவழைத்து, வீடியோ எடுத்து மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடமிருந்த மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், பறிக்கப்பட்ட 1 பவுன் தங்க நகை அவர்களது மற்றொரு நண்பரான விக்னேஷ் என்பவரிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர், அவர்களைப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், நகையுடன் தலைமறைவாக இருக்கும் விக்னேஷ் என்பவரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். மொபைல் செயலி மூலம் பழகி மிரட்டிப் பணம் பறித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
