திண்டுக்கல்லில் உலகப் புகழ்பெற்ற பிரியாணி உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற வாடிக்கையாளருக்கு உணவக நிர்வாகம் அலட்சியமாகப் பதிலளித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பூட்டு தயாரிப்பிற்கும், சுவையான பிரியாணிக்கும் பெயர் பெற்றது திண்டுக்கல் மாநகரம். இங்குள்ள ரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர், திண்டுக்கல்லில் உள்ள பிரபல உணவகமான தலப்பாகட்டி பிரியாணி கடையில், ஆன்லைன் உணவு செயலி (Food Delivery App) மூலமாக பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவு கடைக்கு வந்ததும், அதைத் திறந்து சாப்பிட முயன்ற கோபி மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில், அந்த பிரியாணியில் புழுக்கள் இருப்பதை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சமைக்கப்பட்ட உணவு கெட்டுப்போயிருந்ததும், அதில் புழுக்கள் இருந்ததும் அவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, தங்களுக்கு விநியோகிக்கப்பட்ட கெட்டுப்போன பிரியாணியை எடுத்துக்கொண்டு, கோபி நேரடியாகத் திண்டுக்கல்லில் உள்ள அந்த குறிப்பிட்ட தலப்பாகட்டி பிரியாணி கடைக்குச் சென்றுள்ளார். “பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் இப்படிப்பட்ட மோசமான உணவை எப்படி வழங்கலாம்?” என்று அங்கிருந்த ஊழியர்களிடமும், மேலாளரிடமும் நியாயம் கேட்டனர் ஆனால், தவறுக்கு வருத்தம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, உணவகத் தரப்பில் முறையான பதில் அளிக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட கோபி குற்றம் சாட்டுகிறார். பொறுப்பற்ற முறையிலும், அலட்சியமாகவும் பதிலளித்து அவரை அங்கிருந்து அனுப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. “ஆன்லைன் ஆப் மூலமா இந்த கடையில பிரியாணி வாங்கினேன். கடையில் வச்சு சாப்பிடும்போதுதான் பார்த்தோம், அதுல புழுக்கள் இருக்கு. குழந்தைகளும் இதைத்தான் சாப்பிட இருந்தாங்க. உடனே கடைக்கு வந்து கேட்டா, அவங்க ரொம்ப அலட்சியமா பதில் சொல்றாங்க. காசை வாங்கிட்டு இப்படிப் பழசான, கெட்டுப்போன உணவை விக்கிறாங்க. இது மேல உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கணும்.”
பிரபலமான பிராண்ட் மற்றும் சுவையின் மீது நம்பிக்கை வைத்து அதிக பணம் கொடுத்து உணவை வாங்கும் பொதுமக்களுக்கு, இது போன்ற சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன உணவுகள் வழங்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற உணவகத்திலேயே இந்த அவல நிலை என்றால், சாதாரண கடைகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக இந்த குறிப்பிட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திண்டுக்கல் பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


