க்ரைம்

அரசுக்கு ரூ.32 கோடி நாமம் – செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு

பார்களில் வருமானம் குறைந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள்

ED அளித்த ஆவணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

வழக்கு மேல் வழக்குகள் : சிக்கும் செந்தில் பாலாஜி

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளில் அமைச்சராக கோலோச்சியவர் செந்தில் பாலாஜி. இரு கட்சிகளிலுமே அதிகார மையத்தோடு மிக நெருக்கமாக இருப்பவர், ஆட்சிகள், காட்சிகள் மாறினாலும் கரூர் மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் செந்தில் பாலாஜி. இவ்வாறு ஒரு புறம் அவரின் அரசியல் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்றாலும், அதற்கு ஸ்பீட் பிரேக் போன்று பல வழக்குகளை சந்தித்து சிக்கலில் சிக்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த திமுக ஆட்சியில், சிட்டிங் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர், அவருக்கு அறுவை சிகிச்சை என கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக அந்த பரபரப்பு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பல கட்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார்.

ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு அப்போதைய அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அறிந்த நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. தொடர்ந்து, அமலாத்துறைக்கும், சென்னை மத்திய குற்ற பிரிவு விசாரணைக்கும் மாறி மாறி சென்று கொண்டிருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இந்த நிலையில் தான் த.வெ.க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்ற விவகாரம் விஸ்வரூபமான நிலையில், அதன் பின்னணியிலும் செந்தில் பாலாஜியின் பெயர் அடிபட தமிழக அரசியல் சூடுபிடித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக விசரணைக்காக ஆஜராகி வந்தார்.

இதற்காக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செந்தில் பாலாஜி தங்கி இருந்த ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டும் இல்லாமல், செந்தில் பாலாஜியிடமும் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கரூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் FIR வெளியானது. அதில், டாஸ்மாக் கடைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வருமானம் அதிகரித்து வந்ததாகவும், ஆனால் பார்களில் இருந்து வருமானம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது அதிகாரிகளின் கண்களை உறுதியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மொத்தமாக அரசுக்கு ரூ.32 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், டாஸ்மாக் டெண்டர் விடுவதிலும் மற்றும் போக்குவரத்து பிரிவிலும் பல்வேறு மோசடிகள் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்போதைய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மேலாளராக இருந்த IAS அதிகாரி விசாகன், டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் பன்னீர்செல்வம், ராமதுரை உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மதிமுக கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய செந்தில் பாலாஜி குறுகிய காலத்தில் அவர் அடைந்த உயரம் எதிர்ப்பாராதது. அதே போல 15 வருட அமைச்சர் வாழக்கையிலும் இவரை போல வழக்குகளை சந்தித்த அரசியல்வாதி யாரும் இல்லை என்றே சொல்லலாம். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இதனை வைத்து இன்னும் எத்தனை துறைகள் வழக்கு தொடர போகிறதோ என்பது விசாரணை அமைப்புகளுக்கே வெளிச்சம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button