
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பூங்குருத்தி கிராமத்தில் ஒற்றை யானை தாக்கியதில் கோவில் பூசாரி பலியானதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த ஒற்றை யானை கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பூங்குருத்தி கிராமத்தில் தங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு அந்த கிராமத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஆனந்தன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு தனது இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த ஒற்றையானை ஆனந்தனை தூரத்தி சென்று தாக்கியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஆனந்தனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி, குப்பம் சாலையில் கோவில் பூசாரி ஆனந்தனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினரிடம்
கிழ்பூங்குருதி கிராம மக்கள் ஆந்திராவில் இருந்து இடம் பெயர்த்து வந்த ஒற்றை காட்டு யானையை உடனடியாக ஆந்திரா வனப்பகுதிக்குள் விரட்டி யானைகள் இடம் பெயருவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து யானைகள் இடம் பெயருவதை தடுக்க மின் வேலிகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் யானை தாக்கி பலியான கோவில் பூசாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.



