
பிராட்வேயில் பாத்திரக்கடையில் சோதனை மேற்கொண்ட GST அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வே அருகே உள்ள தங்கசாலையில் அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பாத்திரங்களின் மொத்த விற்பனை செய்யும் 300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் GST துறையைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நிஷாந்த், கும்பேசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அனீஸ், சுசில், அருண் பிரசாத், ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட ஆறு அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள இரண்டு பாத்திரக் கடைகளில் சோதனை நடத்த சென்றனர். அப்போது, கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் சோதனைக்கான நோட்டீஸ் மற்றும் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் அதனை வழங்க மறுத்ததாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். மேலும், அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்த 300-க்கும் மேற்பட்ட பாத்திரக்கடை வியாபாரிகள் ஒன்று திரண்டு, அதிகாரிகள் வெளியே செல்ல முடியாத வகையில் அவர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானைகவுனி போலீசார், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றனர். இருப்பினும், வியாபாரிகள் சமரசத்தை ஏற்க மறுத்ததால், பூக்கடை துணை காவல் ஆணையர் கோபி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனர். பின்னர், போலீசார் சிறை பிடிக்கப்பட்டிருந்த GST அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். அப்போது வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
