
கேரளாவில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து திருச்சூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மலப்புரம் மாவட்டம் குட்டிப்பறம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி தலைகுப்பற கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணித்த பெருவயல் பகுதியைச் சேர்ந்த வைஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்ட பயணிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



