
சென்னை நேதாஜி நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது கிடைத்த 4 கிராம் தங்க டாலர் ஒன்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி ஆக்கியாவிற்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்த தம்பதி செய்யது, ரிஸ்வானா. இவர்களது மகள் ஆக்கியா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது சுமார் 4 கிராம் தங்க டாலர் ஒன்றைக் கண்டெடுத்தார். இது குறித்து உடனடியாக தனது தந்தையிடம் ஆக்கியா தெரிவித்தார். அதன் பின்னர், பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆர்.கே.நகர் காவல் நிலைய போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ஆக்கியா தனது தந்தையுடன் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று, போலீசாரிடம் தங்க டாலரை ஒப்படைத்தார். சிறுமியின் நேர்மையையும் பொறுப்புணர்வையும் பாராட்டிய போலீசார், அவரை வாழ்த்தினர். இதற்கிடையில், அதே பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமையா என்ற பெண் தனது தங்க டாலரை தவறவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் உரிய அடையாளங்களை சரிபார்த்த பிறகு, தங்க டாலரை சுமையாவிடம் ஒப்படைத்தனர்.


