க்ரைம்

கொடுங்கையூரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கு – இருவர் கைது

சென்னை கொடுங்கையூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கட்டை மற்றும் செங்கல்லால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மணலியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர், கொடுங்கையூரில் ஸ்டீல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலார்கள் நிறுவன கட்டிடத்தின் 2-வது மாடியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, மது போதையில் அனுராஜுக்கும் தளபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், அனுராஜ் தளபதியை தாக்கிவிட்டு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தளபதியும், விஜயகுமாரும் மது போதையில் மொட்டை மாடிக்கு சென்று, அங்கு கிடந்த மரக்கட்டை மற்றும் செங்கல்லால் அனுராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அனுராஜுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிறகு தளபதி மற்றும் விஜயகுமார் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை தனது ஸ்டீல் நிறுவனத்திற்கு வந்த உரிமையாளர் கணேஷ் பாபு, அனுராஜை தேடியபோது, அவர் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கொடுங்கையூர் போலீசார், அனுராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் தப்பிச் சென்ற தளபதி மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் கொலைக்கான காரணம், மது போதையில் ஏற்பட்ட தகராறு மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button