
செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை கிராமத்தில் மலை மீது பழமையான மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புடையதாக கூறப்படும் மரகத முருகன் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த மரகத முருகன் சிலையை திருடிச் சென்றனர் . மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படும் மரகத முருகன் சிலை திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, கடவுள் சிலைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், கோவில்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.