
ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் கார்களை வனத்துறையினர் விரட்டிச் சென்று பிடித்தனர். நீண்ட தூரம் துரத்திச் சென்ற நிலையில், ஒரு காரின் டயர் திடீரென வெடித்ததால், கடத்தல்காரர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய சோதனையில் 2 கார்களை பறிமுதல் செய்ததுடன், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய செம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கார்களை அடிப்படையாகக் கொண்டு கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


