செய்திகள்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் – மோதிரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.2,560 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தயாரிக்கப்படும் தங்க மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்காக, மாநிலம் முழுவதும் 107 மையங்களில் நவீன பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற நகைக்கடை நிறுவனங்கள் தங்க மோதிரங்களை தயாரித்து அனுப்பும் பணியை தொடங்கியுள்ளன. இதை தொடர்ந்து, முதல் கட்டமாக 89,955 மோதிரங்களை தயாரித்து வழங்கும் பொறுப்பு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில் மோதிரங்கள் பேக்கிங் செய்யப்பட்டு, அதில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் என்ற பெயரும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையில் உள்ள நிறுவனத்தின் இரண்டு பிரத்யேக மையங்களில் மோதிரங்களை பேக்கிங் செய்து அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. மேலும், தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் தங்கத்திற்கான தொகையை அரசு செலுத்துவதாகவும், மோதிரங்களை உற்பத்தி செய்தல், ஹால்மார்க் முத்திரையிடுதல், பாதுகாப்பாக பேக்கிங் செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பணிகள் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டத்திற்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் மோதிரங்களை அனுப்பத் தொடங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button