தற்போது புதியதாக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தவண்ணம் உள்ளது. அதில் முக்கியமாக 717 அரசு மதுபான விற்பனை நிலையங்களை மூட உத்தரவிட்டது மட்டுமல்லாது சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
ஆனால் ஆட்சி மாறியும் அதிகாரிகள் மாறாததால் காட்சிகள் மாறவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல்லில் இயங்கிவரும் மனமகிழ்மன்றங்களுடன் இணைந்து செயல்படும் FL2 மதுக்கடைகளில் அரசு மதுபான விற்பனை நிலையங்களில் விற்கப்படும் லேபிளுடன் கூடிய மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்த செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அதே நிலை தொடர்ந்து வருகிறது
இந்நிலையில் இதுபோன்று FL2 கடைகளில் விற்பனைக்கு வரும் அரசு மதுபான கடை பாட்டில்கள் எப்படி கடத்தப்படுகின்றன என தேடியபோது கடந்த சனிக்கிழமை (16.05.2026) பட்டப்பகலில் சிறுமலை பிரிவில் உள்ள அரசு மதுபான விற்பனை நிலையத்தில் இருந்து சாக்கு மூட்டைகளில் கட்டி 5 மூட்டைகள் நிறைய மதுபான பாட்டில்கள் இருசக்கர வாகனத்தில் கட்டி கொண்டுசெல்லும் வீடியோ கிடைத்தது
அதே சமயம் இந்த அரசு மதுபான விற்பனை நிலையத்துடன் இணைந்த மதுக்கூடத்திற்கு அனுமதி இல்லாததால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மதுக்கூடத்தை பூட்டி சீல் வைத்திருந்த நிலையில் மதுக்கூடத்தை நடத்தும் நபர் சீல் மீது தடை செய்யப்பட்ட நெகிழி பையினை கட்டி மறைத்துவிட்டு மதுக்கூடத்தின் கிழக்குப்பகுதி கதவினை சட்டவிரோதமாக திறந்து மதுக்கூடத்தை நடத்தி வருகின்றனர்
தொடர்ந்து பல்வேறு உத்தரவுகள் சட்ட விதிமீறல் இருக்கக்கூடாது என்றும் மீறினால் பாரபட்சம் இல்லாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்படும் என புதிதாக பதவியேற்ற ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான அரசு எச்சரித்து வரும் நிலையில் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு கல்லாகட்டும் மனநிலையில் மட்டும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் பணியாற்றி வருவதாகவும் இவர்களது இந்த செயல் கண்டிப்பாக ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது