பள்ளியில் படிக்கும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்த நபர்
இன்ஸ்டாகிராம் மூலமாக மூன்று வருடங்களாக ஏராளமான சிறுமிகள் மற்றும் பெண்களிடம் ஆபாச பேச்சு
ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து சிறுமிகள் மற்றும் பெண்களை மிரட்டிய நபர்

நீங்க தனிமையா எப்போவாது இருந்து இருக்கீங்களா சார் ? என ராட்சசன் படத்தில் தனது வகுப்பு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் ஒருவர் போலீஸ் விசாரணையில் போது சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்….
அதேபோன்று திருச்சியில் தனிமையில் இருந்த 36 வயது நபர் செய்த காரியம் பல சிறுமிகளையும் பெண்களையும் பெரும் மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் கொண்டு சென்றிருக்கிறது.
சென்னை சைபர் க்ரைம் போலீசில் பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் தங்களை சமூகவலைதளம் மூலம் ஒருவர் ஆபாசமாக பேசி வருவதாகவும் புகார் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து சிறுமிகள் அளித்த இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பேஸ்புக் ஐடி ஆகியவற்றை வைத்து அவற்றின் ஐபி முகவரியை வைத்து திருச்சியை சேர்ந்த பத்மநாபன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பத்மநாபனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் பத்மநாபனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரது மனைவி பிரிந்து சென்றிருக்கிறார்.இதனைத் தொடர்ந்து பத்மநாபன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் குடித்துவிட்டு தனிமையில் இருந்த பத்மநாபன் தனது தனிமையை போக்கிக் கொள்ள அவரது மூளை வக்கிரமாக யோசித்து இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் உள்ள பத்மநாபன் அதனையே தனது வக்கிர புத்திக்கு ஆயுதமாக மாற்றி இருக்கிறார்.இன்ஸ்டாகிராமில் அழகான பதிவிடும் பள்ளியில் படிக்கக்கூடிய சிறுமிகள் மற்றும் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து பழகி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவருடைய பேச்சு திசை மாறி ஆபாசமாகவும் பாலியல் தொடர்பாகவும் பேசியிருக்கிறார் இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் அவரை திட்டி இருக்கிறார்கள்.அவர்களை தன்னுடள் தொடர்ந்து பேச வைப்பதற்காக பத்மநாபன் சிறுமிகளுடைய புகைப்படங்களை எடுத்து ஏஐ தொழில் நுட்ப உதவியுடன் மார்பிங் செய்து, அதன் பின்னர் அதனை Fake அக்கவுண்ட் மூலமாக ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கே அனுப்பி இருக்கிறார்.
இதனால் பயந்து போன சில சிறுமிகள் வேறு வழியின்றி பத்மநாபனிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால் பத்மநாபனின் பேச்சு அத்துமீறவே அதனை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தான் காவல்துறையை அனுகி இருக்கிறார்கள் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள்.
இது ஒரு புறம் இருக்க குடித்துவிட்டு ரேண்டமாக ஏதாவது செல்போன் எண்ணிற்கு அழைத்து அதில் பெண்களின் குரல் கேட்டால் அவர்களிடம் பேச்சு கொடுப்பதும், பின்பு சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கும் செல்போனில் ஆபாசமாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்திருக்கிறது
அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் செல்போனை போலீசார் சோதனை செய்தபோது அதில் கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஏராளமான சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அவர் இதுபோல பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர்கள் மற்றும் சிறுமிகள் பல துறைகளில் சாதித்து வரும் நிலையில் அதனை தனது வக்கிர புத்திக்காக பயன்படுத்திய பத்மநாபனின் செயல் எல்லோரையும் அருவருப்பு அடைய செய்திருக்கிறது
இது போன்ற பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் மற்றும் பத்மநாபன் போன்றவர்கள் இனி வருங்காலத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்த முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல தாய்மார்களின் கோரிக்கையாக இருக்கிறது

