
திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. அந்த ஏடிஎம் மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரம் மாயமானது. இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அந்த விசாரணையில், முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆம்னி வேனில் வந்து, ரூ.12.5 லட்சம் பணம் நிரப்பப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஏடிஎம் மையம் அருகிலேயே இயந்திரத்தை உடைக்க முடியாததால், அதனை வேறு இடத்துக்கு கொண்டு சென்ற கொள்ளையர்கள், இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடங்களில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சத்திரம் அருகே கிருஷ்ணா கால்வாய் கரையில் உடைக்கப்பட்ட நிலையில் ஏடிஎம் இயந்திரம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், ஏடிஎம் இயந்திரத்தை கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தண்டலம் அருகே கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆம்னி வேனும் கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் வேனை அங்கேயே நிறுத்திவிட்டு, தனித்தனி இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளில் பதிவான இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

