
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவு பேட்டையில், பெண் ஒருவர் கடுமையான நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது மருத்துவர்கள் மேற்கொண்ட எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளில், அவரது வயிற்றில் அசாதாரணமான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக்கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி ஆகியவற்றை அகற்றினர். அதன் பின்னர், அகற்றப்பட்ட பேனாக்களில் ஒன்றில் மூடி இல்லாமல் இருந்ததால், அதன் முனைப்பகுதி குத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் இத்தனை பொருட்களை அவர் எவ்வாறு விழுங்கினார் என்பது மருத்துவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் கடந்த 10 ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் விவாகரத்து செய்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து மருத்துவ சிகிச்சையுடன், மனநல நிபுணர்களின் கண்காணிப்பும் ஆலோசனையும் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இத்தகைய சம்பவங்களில் உடல் நலத்துடன் மனநலப் பராமரிப்பும் மிகவும் முக்கியமானது.

