
தென்காசி மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் ஹரிராம் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. அப்பகுதியில் நாய் ஒன்று மான் குட்டியை துரத்தியது. அப்போது நாயிடம் சிக்காமல் தப்பிக்க வேகமாக ஓடிய மான் குட்டி, எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இந்நிலையில், மாலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே சென்ற ஹரிராம், கிணற்றுக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதால் எட்டிப் பார்த்தபோது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மான் குட்டியை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஆலங்குளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மான் குட்டியை பாதுகாப்பாக மீட்க ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்தினரின் உதவியை நாடினர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கயிறு மூலம் சுமார் 40 அடி ஆழத்துக்கு இறங்கி மான் குட்டியை வலையில் சிக்கவைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மான் குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர், மான் குட்டியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற வனத்துறையினர், அங்கு பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.


