
சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, அரசியல் ரீதியாக கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகளை கடந்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த தி.மு.க.,விற்கு நன்றி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், இந்தி பேசும் மாநிலங்களில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 5 அல்லது 6 மாநிலங்களில் வெற்றி பெற்றாலே ஒருவர் பிரதமராகும் சூழல் உருவாகலாம். இதனால் தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும். இதை தடுக்க வேண்டும். தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும். எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும். அதற்காக தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்களும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களைப் போல தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும். இதனால் மக்களவைத் தொகுதிகளை 50 சதவீதம் அதிகரித்து வழங்கினாலும் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும். தமிழகம் வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. அதற்காக நாம் தொடர்ந்து உழைத்து வருகிறோம். ஆனால், மத்திய அரசுக்கு தமிழகம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும், நிதிப் பகிர்வாக 29 பைசா மட்டுமே கிடைக்கிறது. நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.


