
கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி ஊதியமான ரூ.760 வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும், பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. அட்டை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், துப்புரவு பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், 517 ஒப்பந்த துாய்மை பணியாளர்களில் சிலர் பணிக்கு திரும்பி உள்ளதாலும், 100க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள் பணியில் இருப்பதாலும், குப்பை அகற்றும் பணிகள் தொய்வின்றி நடப்பதாக, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



