
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பெருங்கானல் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், சவ்சவ் பந்தல்கள் மற்றும் கோயிலின் தகரக் கொட்டகையை சேதப்படுத்தின.
மேலும், வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள் ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
ஏற்கனவே, காட்டு யானைகளால் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வத்தலக்குண்டு வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், வனத்துறையினரின் நடவடிக்கைகளையும் மீறி யானைகள் மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும் காட்டு யானைகள் அச்சுறுத்தி வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
